Friday, August 19, 2022

சமூகப் போராளி யாழன் ஆதி......

 

ஊற்றங்கரையில் ஆகஸ்ட் 21  அன்று நடைபெறும் முத்தமிழ் இலக்கியப் பேரவையின் கவியரங்கில் கவிஞர் அறிவுமதி  தலைமையில் “தெளித்தலும் தெளித்தல் நிமித்தமும்” என்னும் பொது தலைப்பின் கீழ் வியர்வை துளி , மைத்துளி , கண்ணீர் துளி என மூன்று தனிச் சுற்றுக்களில்  கவிதை பாட வருகிறார் சமூக போராளி யாழன் ஆதி !*


*
யாழன் ஆதியை அறிவீர்களா தோழர்களே ?*


*
யாழன் ஆதி தமிழில் எழுதிவரும் நவீனக் கவிஞர்களில் ஒருவர் . தலித் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாக செயல்பட்டுவருபவர்* .

*
தாழ்த்தப்பட்ட, துன்பப்படும் மனிதர்களின் வாழ்க்கையில் உள்ள வலியை கவிதை மூலம் உலகுக்கு தயங்காமல் வெளிப்படுத்தும் கவிஞன். யாருக்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாமல் சமூகத்தில் பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்காக போராடுவதையே நோக்கமாகக் கொண்டு வாழ்பவர்*

*
வானம் பொய்த்து அரசுகள் வஞ்சித்து இயற்கை கைவிட்ட விவசாயிகள் தங்களை கொத்தடிமைகளாக தோல் தொழிற்சாலையில் பதிவு செய்துகொண்டுள்ள அவலம் நிறைந்த ஆம்பூர் பகுதியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் பிரபு . தமிழ் மீதான பற்றால் யாழன்ஆதி என மாற்றி வைத்துக்கொண்டார்*

*
ஆசிரியராக பணியாற்றினாலும் இயற்கை மீது கொண்ட காதலால்.... மனிதன் தான் வாழ இயற்கையை அழிப்பதை பொறுக்க முடியாமலும், பாலாறு பாழானதை பொறுக்க முடியாமல் அதை எப்படிச் சரி செய்வது என தீவிர சுற்றுச்சூழல் ஆய்வில் ஈடுபட்டு அதற்காக களமாடும் போராளி யாழன் ஆதி* !

*
தலித் முரசு இதழில் முதல் பக்க கவிதைகளை எழுதிவருகின்றார். பல்வேறு இதழ்களில் படைப்புகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. இவருடைய கவிதைகள் ஆங்கிலம், மலையாளம் போன்ற மொழிகளில்மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் இவருடைய செவிப்பறை நூலை பாடப்புத்தகமாக வைத்திருந்தது*.

*
கவிதை மட்டுமில்லாமல் அனைத்து இலக்கிய வகைமைகளிலும் அவருடைய பங்களிப்பு இருக்கின்றது. புதிய தலித் எழுத்தாளர்களைப் பற்றி தலித் முரசில் மாற்றுப் பாதை என்னும் கட்டுரைத் தொடரை எழுதி வருகிறார். சாம்பல் என்னும் குறும்படத்தையும் இவர் இயக்கி இருக்கின்றார்*

*
இசை உதிர் காலம், செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா, போதலின் தனிமை, காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும், யாருமற்ற சொல், மனிதம் கொன்ற சாதியம், ஆம்பூர் (ஊர் வரலாற்று நூல்) ஆகிய படைப்புகளை வெளியிட்டுள்ளார். தம்மபதம் என்னும் புத்தரின் போதனைகளை ஆங்கிலம் வழி தமிழில் அவர் மொழிபெயர்த்திருக்கிறார்*.

*
எழுத்தாளர் , கவிஞர் ,சூழலியல் செயற்பாட்டாளர் ,சமூக போராளி என பன்முகங்கள் கொண்ட ஆற்றல் மிகு ஆளுமையாக ஊற்றங்கரை இலக்கியமேடையில் கவிதை விருந்து படைக்க வருகிறார் .தமிழ் என்னும் ஆயுதம் தாங்கி வரும் போராளியின் கவிதை வரிகளுக்காக காத்திருப்போம் ! வாருங்கள் யாழன் ஆதியை சந்தித்து மகிழ்வோம்!!* 

No comments:

Post a Comment